இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 3 பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது என்று ஐ.நா. குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐலேண்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட ஐ.நா. குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆனால் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை இலங்கை நாளிதழான ஐலேண்ட் அவ்வப்போது வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட செய்தியில், இலங்கைப் போரின் போது அப்பட்டமாக மனித உரிமை மீறல் நடைபெற்றதாகவும், மாபெரும் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்டப் போரில் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களான நடேசன், பூலித்தேவன், ரமேஷ் ஆகியோரை ராணுவம் சுட்டுக்கொன்றதாக அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நடேசன், பூலித்தேவன், ரமேஷ் ஆகிய மூவரும் சரணடைய விரும்புவதாக மத்தியஸ்தக் குழுவினரிடம் விருப்பம் தெரிவித்தனர். அக்குழுவினர் இதுகுறித்து இலங்கை அதிபர் ராஜபட்ச, பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்ச ஆகியோரிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டறிந்த இருவரும், புலிகளின் தலைவர்களை சரணடைய ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை அரசு சொன்ன இடத்துக்கு மூவரும் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தனர். வரும்போது சமாதானத்தை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு வந்தனர். ஆனால் அவர்களை ராணுவத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளினர் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஐலேண்ட் நாளிதழ் கூறியுள்ளது.
- நன்றி தினமணி
கருத்துரையிடுக