jeevan jeevan Author
Title: ' கனி '- இன்று ஒரு தகவல்
Author: jeevan
Rating 5 of 5 Des:
        தமிழகத்தில் இப்போது மா சீசன் தொடங்கியுள்ளது. விதவிதமான கனிகள் விளைந்து வந்தாலும் மூன்று கனிகளை நேசித்து, முக்கனி என அழைத்தும் சு...




        தமிழகத்தில் இப்போது மா சீசன் தொடங்கியுள்ளது. விதவிதமான கனிகள் விளைந்து வந்தாலும் மூன்று கனிகளை நேசித்து, முக்கனி என அழைத்தும் சுவைத்தும் மகிழ்பவர்கள் தமிழர்கள். 

        அந்த முக்கனி வரிசையில் மாங்கனி முதலாவது கனியாய் வைக்கப்பட்டிருப்பதிலிருந்து தமிழர்கள் மாம்பழப் பிரியர்கள் என்பது தெளிவாகும். 

           ஆண்டுதோறும் தொடங்கும் மாங்கனி சீசன் அதன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும். அதேநேரம் அவர்களை அதிருப்தியிலும் ஆழ்த்திவிடுவது வாடிக்கையாகிவிட்டது. எந்தக் கடைக்காவது சென்று மாம்பழத்தை வாங்கி ஆசைதீர உண்டு மகிழ்ந்தோம் என்றிருந்த காலம் போய்விட்டது.

             இப்போது எங்காவது சென்று மாம்பழம் வாங்க வேண்டுமானால் கனியை பலமுறை பார்வையால் பரிசோதித்து, பிறகு கடைக்காரரிடம் பல கேள்விகள் கேட்டு அதன் பின்னரே வாங்க வேண்டிய நிலைமை. காரணம் ஒரு சொல், அது "கல்'.

           முன்பெல்லாம் மாங்காயைப் பறித்து வைக்கோல் பொதிந்தும், புகை போட்டும் பழுக்க வைப்பார்கள். அவை மஞ்சள், பச்சை, சிவப்பு வண்ணங்கள் ஒன்றோடொன்று கலந்ததுபோன்றும், ஏறக்குறைய இயற்கையாகவே பழுத்ததைப்போன்ற சுவையுடனும் விற்பனைக்கு வரும். அப்போது கடைக்காரர்களுக்கு பொதுமக்கள் மீதான அக்கறையும் செய்யும் தொழிலில் நேர்மை வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது. 

    இப்போது அவசரகாலம் மட்டுமல்ல, பிஞ்சில் பழுக்கும் காலமும்கூட. பறிக்கப்படும் மாங்காய்களையும், பிஞ்சுகளையும்கூட எதைச் செய்தாவது விரைவில் பழுக்கவைத்து விற்று பொருளீட்ட வேண்டும் என்பது ஒன்றே விற்போரின் குறிக்கோளாக இருக்கிறதோ என எண்ணச் செய்கிறது.

      இதனால் அத்தகையோருக்கு அண்மைக்காலமாக பேருதவியாக வந்து கைகொடுத்திருக்கிறது கார்பைடு கல் என்ற வேதிப்பொருள். இதைப் பயன்படுத்தினால் பழுக்கும் நிலையில் இல்லாத மாங்காய்கள்கூட, 24 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும் எனக் கூறப்படுகிறது. 

    அந்த வேதிப்பொருளிலிருந்து எழும் சாம்பல் போன்ற துகள்கள் மாங்கனியின் மீது படிந்திருக்கும். அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் மேற்புறத் தோல் ஒரே மாதிரியான மஞ்சள் வண்ணத்திலும், உள்புறம் காயாகவும், பழுத்தும் காணப்படும். ஒன்றிரண்டு நாள்களில் பழத்தின்மீது கரும்புள்ளிகள் காணப்படும்.

      மேலும், கார்பைடு கல்லிலிருந்து உருவாகும் எத்திலீன் என்ற வாயு மாம்பழத்துக்குள் ஊடுருவியிருக்கும் என்றும், அது உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

     இத்தகைய மாம்பழங்களை உண்போர் தொண்டை எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

       ஏழைகளால் அதிகம் உண்ணப்படுகிற மாங்கனியின் நிலைமை இப்படி என்றால் எப்போதுமே ஏழைகளுக்குக் எட்டாக்கனியாகவே இருக்கும் ஆப்பிள்களின் நிலைமையும் சற்றேறக்குறைய அதேபோலத்தான் உள்ளது.
  
       பல்வேறு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழ வகைகள் தமிழகம் வருவதற்குள் சுருங்கிவிடாமல் நீண்டநாள்களுக்குத் தரமானதாகத் தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அவற்றின் மீது ரசாயன மெழுகு பூசப்படுகிறது.

 அத்தகைய பழங்களை லேசாகச் சுரண்டிப் பார்த்தால் சுருண்டு வரும் மெழுகுத் துகள்களே அதற்குச் சாட்சி.

        மேல்தோலின் பளபளப்பு கண்டே மயக்கம் கொள்பவர்களின் பலவீனத்தைப் புரிந்துகொண்டே ஆப்பிள், சிலவகை ஆரஞ்சுகளின் மீது இதுபோன்ற மெழுகுப் பூச்சு வேலைப்பாடுகளும், நகாசு வேலைகளும் செய்யப்படுகின்றன. இத்தகைய கனிகளை எடுத்துப் பார்ப்பவர்கள் தங்கள் முகத்தைக்கூட அதில் பார்த்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட பளபளப்பில் இவ்வகை ஆப்பிள் மின்னும். இதற்காகவே அவை சாதாரண ஆப்பிள்களைவிட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

    மெழுகுப் பூச்சு வேலைப்பாடுகள் பழ உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். ஆனால், உண்போரின் வயிற்றுக்கு மிகவும் பாதகமானது.

         செயற்கைப் பொருள்களில்தான் பல வழிகளில் கலப்படம் செய்யப்படுகிறது. அவற்றிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நிலைமாறி, இயற்கை தன் இனிய கொடையாக மனிதருக்கு விளைவித்துக் கொடுக்கும் கனிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.


" தினமணி " கட்டுரை


About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top