பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்திய அமைச்சர் கமல்நாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகேயுள்ள சிந்த்வாரா என்னும் இடத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
ஊழலுக்கு எதிரான ராம்தேவின் போராட்டத்தில், பொதுமக்கள் மட்டுமல்ல மத்திய அரசைச் சேர்ந்தவர்களும் பங்குகொள்வார்கள் என்றும் அவர் பரபரப்பு கருத்தை வெளியிட்டார். மேலும், "யோகாவில் ராம்தேவ் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இது இந்தியாவை பலப்படுத்தியுள்ளது." என்றும் கமல்நாத் பாராட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "ராம்தேவின் உண்ணாவிரதம் ஒரு நாடகம். அது தோல்வியில் முடியும்." என்று சமீபத்தில் கருத்து கூறியிருந்தார். இந்நிலையில், ராம்தேவ் போராட்டத்துக்கு அமைச்சர் கமல்நாத் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் மற்றும் கறுப்புப் பணம் பதுக்கலுக்கு எதிராக தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், ஜூன் 4-ம் தேதி முதல், பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கருத்துரையிடுக