ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல் வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணிடம் சிபிஐ விரைவில் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
விசாரணைக்கு தேவையான ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய சங்கத்திடம் இருந்தும், வேறு சில இடங்களில் இருந்தும் சிபிஐ திரட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அசோக் சவாண் மீது சிபிஐ அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகியுள்ளது. ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க பொது செயலாளர் ஆர்.சி. தாகூர், ஓய்வு பெற்ற ராணுவ பிரிகேடியர் எம்.எம்.வான்சூ, காங்கிரஸ் தலைவர் கே.எல். கித்வாய் உள்ளிட்டோரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது.
மகாராஷ்டிர முதல்வராகும் முன் அசோக் சவாண், மாநில வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரும், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்கத்தின் ஆர்.சி.தாகூர், எம்.எம். வான்சூ, கே.எல்.கித்வாய் உள்ளிட்டோரும் இணைந்து முறைகேடு செய்து ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வீடுகளை வாங்கிக் கொடுத்தனர் என்பது சிபிஐ தரப்பு குற்றச்சாட்டு.
கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை முதல்வர் அசோக் சவாண் அவரது மாமியார் உள்ளிட்டோருக்கு வாங்கிக் கொடுத்த தகவல் வெளியானதும் மகாராஷ்டிரத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் தலைமை வேறு வழியின்றி அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்தது. அசோக் சவாண் மட்டுமின்றி ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் தியாகிகளுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டை முறைகேடாக தங்களுக்குச் சொந்தமாக்கிய விஷயமும் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில் சிபிஐ விசாரணை செய்யவுள்ளதாக வெளியான தகவல் குறித்து கருத்துத் தெரிவித்த அசோக் சவாண், சிபிஐ-யிடம் இருந்து இதுவரை எனக்கு சம்மன் ஏதும் வரவில்லை. விசாரிக்க நோட்டீஸ் அனுப்பினாலும், அது சிபிஐ-யால் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைதான் என்றார்.
ஆதர்ஷ் முறைகேடு தொடர்பாக அசோக் சவாண், ராணுவ அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மாநில அரசு அதிகாரிகள் என மொத்தம் 14 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கருத்துரையிடுக