கடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளதே...
மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம். அடுத்து, தேர்தல் கமிஷன்! விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போஸ்டர்கள், பிரசாரங்கள் என, பலவித ஏற்பாடுகளை செய்தது.
* பண வினியோகமும், ஊழலுக்கு எதிரான அலை ஆகியவை தான் காரணம் என கூறப்படுகிறதே...
அவையும் காரணமாக இருக்கலாம். விழிப்புணர்வு பிரசாரமும் முக்கியக் காரணம். 2009 லோக்சபா தேர்தலைவிட, 5 சதவீதமும், 2006 சட்டசபைத் தேர்தலை விட, 7 சதவீதமும் மட்டுமே அதிகரித்துள்ளது. இதை பெரிதாக சொல்ல முடியாது. எனினும், ஓட்டுப்பதிவு அதிகரித்திருப்பது நல்ல விஷயம்.
* பண வினியோகத்தை தடுக்கவே முடியாதா?
கடந்த தேர்தல்களை விட, இப்போது பண வினியோகம் குறைந்துள்ளது. தேர்தல் கமிஷன் கெடுபிடியால், சரிவர பண வினியோகம் செய்ய முடியாமல், அரசியல் கட்சிகள் தடுமாறியுள்ளன. ஓட்டுக்கு பெரிய தொகை தந்தது போல் தெரியவில்லை. 200, 300 தான் கொடுத்திருக்கின்றனர். இது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. மேலும், பணம் வாங்குபவர்கள், சம்பந்தப்பட்ட கட்சிக்கு தான் ஓட்டு போடுவர் என உறுதியாக கூற முடியாது. பணம் வாங்கி, ஓட்டை மாற்றி போட்டும் வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால், அடுத்தடுத்த தேர்தல்களில், அரசியல் கட்சிகள், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை குறைத்துக் கொள்ளும்; பண வினியோகமும் முற்றிலும் நின்று விடும்.
* தேர்தலில், 55 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே... இவை என்னவாகும்?
தேர்தல் முடிந்த பின்னும், வழக்குகள் மீது எடுத்த நடவடிக்கை பற்றி, உரிய அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்கலாம்; வழக்குகளை துரிதப்படுத்தலாம். ஆனால், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்தல் கமிஷனால் ஒன்றும் செய்ய முடியாது. இரண்டாவதாக, தவறு நடந்ததை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால், பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு, போதிய ஆதாரமோ, சாட்சி சொல்ல முன்வரும் தன்மையோ பெரும்பாலும் கிடைப்பதில்லை. வழக்கை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், தேர்தல் காலத்திய வழக்குகள் நீர்த்துப் போகும் நிலை ஏற்படுகிறது.
* தேர்தல் கமிஷன் மீது கடுமையாக விமர்சனம் வருகிறதே?
கடும் நடவடிக்கை எடுக்கும்போது, அரசியல் கட்சிகள் விமர்சிக்கவே செய்யும்; இது புதிதல்ல. இந்த தேர்தலில், பண வினியோகம் மட்டுமல்லாமல், கட்-அவுட் கலாசாரங்கள், கொடி, தோரணங்கள், சுவர் விளம்பரங்கள், ஆடம்பர செலவுகள், பிரியாணி, மது வழங்குவது போன்றவை பெருமளவு குறைந்திருந்தது.
* தேர்தல் முறைகேடுகள் தொடர்கதையாகிவிடும் போல் தெரிகிறதே...
அரசியல்வாதிகளுக்கு, எப்போதும் பதவி ஆசை விடாது. ஏதாவது ஒரு வழியில், அதை அடைய துடிப்பர். இதற்காக அவர்கள் எதையும் செய்ய துணியும்போது, முறைகேடுகள் வரத்துவங்கி விடுகின்றன. தமிழகத்தில், மற்ற தேர்தல்களை விட, சட்டசபைத் தேர்தல்கள் நேர்மையாக நடந்து வருகின்றன என கருதுகிறேன். முறைகேடுகளை தடுக்க, உறுதியான நடவடிக்கை தேவை. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும், தேர்தல்களை நேர்மையான வழியில் நடத்துவது என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனங்களுக்கு அவர்கள் செவி சாய்க்கக் கூடாது. கடந்த ஆட்சியின்போது, ராணிப்பேட்டை இடைத்தேர்தலில் அதிக முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அந்த தேர்தலை, தேர்தல் கமிஷன் தள்ளி வைத்தது. இதுபோல் முறைகேடு புகார்கள் அதிகம் எழும் இடங்களில், தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும். இரண்டு முறை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால், அடுத்த முறை முறைகேடுக்கு வாய்ப்பிருக்காது. இப்படி தேர்தல்களை தள்ளி வைத்தால், ஓட்டுக்கு கொடுத்த பணத்தின் வீரியம் குறைந்துவிடும். பணம் வாங்கியவர்கள், அந்த கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விடும். எனவே, அதிகளவு முறைகேடு புகார் எழும் தொகுதிகளில், தேர்தல்களை தள்ளி வைக்க வேண்டும்.
* நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு, புதிய அரசு வந்ததும் நெருக்கடி ஏற்படுகிறதே?
நீங்கள் சொல்வது சரிதான். தேர்தல் முடிந்ததும், நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி, மிரட்டப்படும் சூழல்கள் இருக்கவே செய்கிறது. பத்திரிகைகளில் கூட, இது தொடர்பான செய்திகள் வருகின்றன. அதிகாரிகள், தங்கள் பதவிக்காக, அரசியல் கட்சிகளிடம் வளைந்து கொடுத்து செயல்படுவதுதான் இதற்கு காரணம். அனைத்து அதிகாரிகளும் நேர்மையாக செயல்பட துவங்கிவிட்டால், நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு பிரச்னை ஏற்படாது. அரசியல்வாதிகளும், அதிகாரிகள் என்றாலே இப்படித்தான் என்று விட்டு விடுவர். பின், நேர்மையாக செயல்படுவதற்கு எந்த பிரச்னையும் இருக்காது.
* உங்களது பணியையும், பிரவீன்குமார் பணியையும் ஒப்பிடலாமா?
பிரவீன்குமார், சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதற்கு, தேர்தல் கமிஷன் செயல்பாடுகளும் முக்கிய காரணம். பீகார் தேர்தலில் இருந்தே, தேர்தல் கமிஷன், பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது. வாகனங்களை சோதனையிடுவது, வேட்பாளர்களின் தேர்தல் செலவை கட்டுப்படுத்துவது, வருமான வரித்துறை நடவடிக்கை என, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அப்போது, (குப்தா காலத்தில்) தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் இந்தளவிற்கு இல்லை. அடுத்ததாக, என் பணியின் வேகத்தை தடுக்கும் வகையில், என்மீது தனிப்பட்ட முறையில், பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இப்போது அதுபோல் இல்லை.
* "தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளுக்கு, முன்னாள் தேர்தல் அதிகாரிகள் சிலர் கொடுத்த தகவல்கள் தான் காரணம்' என, முதல்வர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
அவர், யாரை குறிப்பிட்டார் என தெரியவில்லை. என்னை குறிப்பிட்டு சொல்லாதபோது, அதுபற்றி நான் விமர்சிக்கத் தேவையில்லை. இருந்தாலும், நான் ஓய்வு பெற்றபின், தேர்தல் கமிஷனுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. அப்படியே நான் கொடுப்பதாக இருந்தாலும், "நீங்கள் தான் ஓய்வு பெற்று விட்டீர்களே... எங்கள் நடவடிக்கையில் ஏன் தலையிடுகிறீர்கள்?' என அவர்கள் கேட்டால், என் மனம் புண்படும். அதனால், நான் அதுபோல் செய்வதில்லை.
* அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, நீங்கள் ஆதரவு கொடுத்தீர்கள். மற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முன் வரவில்லையே?
அது, காந்திய வழியில், அகிம்சை முறையில் நடந்த போராட்டம் என்பதால், அதில் நான் பங்கேற்றேன். என்னைப்போல் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் அதில் பங்கேற்றனர். பணியில் இருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலருக்கும் அதில் ஆர்வம் இருந்தாலும், "அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டோம்' என்ற அவப்பெயர் வந்து விடுமோ என்ற காரணத்தால், அவர்கள் பங்கேற்கவில்லை. ஆனாலும், அது அரசுக்கு எதிரான போராட்டம் இல்லை; ஊழலுக்கு எதிரான போராட்டம் தான்; வெற்றியும் பெற்று விட்டது.
* உ.பி.,வாசியான நீங்கள், ஓய்வுக்குப் பின்னும் இங்கேயே தங்கி விட்டதற்கு ஏதேனும் சிறப்பு காரணங்கள் இருக்கிறதா?
இங்கேயே, 36 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டேன். தமிழ் மொழி, கலாசாரம், உணவுப் பழக்கம் என, எல்லாமே எனக்கு பழகி விட்டது. இப்போதைய சூழலில், ஒவ்வொருவரும், பணி நிமித்தமாக எங்கு செல்கின்றனரோ, அங்கேயே, "செட்டில்' ஆகி விடுகின்றனர்; அப்படித்தான் நானும்.
நரேஷ் குப்தா, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி
THANKS :- DHINAMALAR
கருத்துரையிடுக