விக்ரமிற்கும், டைரக்டர் விஜய்க்கும் விருதுகளை குவிக்க இருக்கும் திரைப்படம் தான் "தெய்வத்திருமகள்".
ஐந்தாறு வயது குழந்தையின் மனநிலை கொண்ட கிருஷ்ணாவின் குழந்தை நிலா. நிலா மீது உயிரையே வைத்திருக்கிறார் கிருஷ்ணா. நிலா பிறந்ததும் அவரது அம்மா இறந்து போக, சுற்றம் மற்றும் நட்பின் உதவியுடன் குழந்தையை வளர்க்கும் கிருஷ்ணாவிற்கு, நிலா ஸ்கூல் போக ஆரம்பித்ததும் பிரச்சனையும் ஆரம்பமாகிறது. அதாகப்பட்டது, ஸ்கூல் கரஸ்பாண்டட் அமலாபாலின் அக்கா மகள் தான் நிலா. மனவளர்ச்சி இல்லாத கிருஷ்ணாவை காபந்து செய்கிறேன் பேர்வழி என, அவரை கதாலித்து, கணவராக மணந்து கொண்டதால் தான், தன் அக்கா அகால மரணமடைந்ததாக கருதும் அமலா, தன் கோடீஸ்வர அப்பாவிடம் சொல்லி குழந்தை நிலாவை கிருஷ்ணாவிடமிருந்து பிரிக்கிறார்.
பிரிந்த நிலாவை கிருஷ்ணாவிடம் சேர்க்கிறேன் என சொல்லி வக்கீல் அனுஷ்கா, கிருஷ்ணாவிற்காக வாதடுகிறார். அமலாபாலின் அப்பாவும், அவரது பணமும் அனுஷ்காவின் வாத திறமைக்கு முன் வென்றதா, தோற்றதா...? கிருஷ்ணாவிற்கு நிலா கிடைத்தாரா...? இல்லையா என்பது தான் மீதிக் கதை! இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ, அத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய்! "கிரீடம்", "பொய் சொல்ல போறோம்", "மதராசபட்டினம்" ஆகிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தில் "தெய்வத்திருமகளை" தந்திருப்பதற்காகவே அவரை பாராட்டலாம்!
கிருஷ்ணாவாக சீயான் விக்ரம், ஐந்தாறு வயது குழந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். விருதுகள் நிச்சயம்! விக்ரம் மாதிரியே அவரது பெண் குழந்தை நிலாவாக வாழ்ந்திருக்கும் பேபி சாராவும் பிரமாதம். அவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான அத்தனை விருதுகளும் உறுதி!
அனுஷ்கா, அமலாபால் இருவரும் கதாநாயகிகளாக இல்லாமல் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருப்பது, "தெய்வத்திருமகள்" படத்தின் பலம்! அனுஷ்காவின் இமாஜினேஷனில், விக்ரமுடன் அவர் பாடும் டூயட் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்கள் படத்தின் பலவீனம்! நாசர், சந்தானம், ஒய்.ஜி.மகேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், "பிளாக்" பாண்டி, சச்சின், பிரியா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
நா.முத்துக்குமாரின் பாடல்கள், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு, நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட இயக்குநர் விஜய்க்கும், விக்ரமுக்கும் கூடவே குழந்தை நட்சத்திரம் பேபி சாராவுக்கும் விருதுகள் பல பெற்று தரப்போவது உறுதி!
"தெய்வத்திருமகள்" - விருதுகள் "பெரும் மகள்!"
கருத்துரையிடுக