jeevan jeevan Author
Title: 3 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம்
Author: jeevan
Rating 5 of 5 Des:
முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் த...



முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையைக் குறைக்கக் கோரி 3 பேரும் அனுப்பிய கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் அண்மையில் நிராகரித்தார்.



இதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.



இந் நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.



இந்த மனுக்கள் நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.



மனுதாரர் முருகன் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டார். அவரது வாதம் வருமாறு:



1991 மே மாதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். முருகன் உள்ளிட்டோர் அதே ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் 1999-ம் ஆண்டிலேயே முடிந்து விட்டன.



அதன் பிறகு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 10 நாள்களில் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2-வது முறையாக அனுப்பிய கருணை மனுக்களை 5 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் நிராகரித்தார்.



அதனைத் தொடர்ந்து 26.4.2000 அன்று குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், உடனடியாக கருணை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர்கள் 5 முறை நினைவூட்டல் கடிதங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினர். அதன் பிறகும் மனுக்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந் நிலையில், கருணை மனுக்களை நிராகரித்து கடந்த ஆகஸ்ட் 12-ல் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். 11 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.



சின்னப்பா ரெட்டி வழக்கு உள்பட பல வழக்குகளில் இத்தகைய கால தாமதத்தை காரணம் காட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய மிக நீண்ட காலதாமதத்தை நியாயப்படுத்த மிகச் சரியான காரணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு சரியான விளக்கமோ, காரணமோ கூறப்படாத காலதாமதம் சட்ட விரோதமானதாகும்.



இந்த வழக்கில் நீண்ட கால தாமதத்துக்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இந்த அசாதாரணமான மற்றும் மிக நீண்ட காலதாமதத்தின் காரணமாக மனுதாரர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கருணை மனு மீது எத்தகைய முடிவெடுக்கப்படும் என தெரியாமல் சிறையில் ஒவ்வொரு நாளும் மன ரீதியிலான சித்திரவதைக்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.



எனவே, கருணை மனுக்களின் மீது முடிவெடுக்காமல், மிக நீண்ட காலதாமதம் செய்ததால், தங்களின் தண்டனையைக் குறைக்குமாறு வலியுறுத்த மனுதாரர்களுக்கு உரிமை உள்ளது.



மனுதாரர்களின் கோரிக்கையில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. ஆகவே, மனுதாரர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். சாந்தன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர். வைகை, மனுதாரர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க 11 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது சட்ட விரோதமானதாகும் என்று குறிப்பிட்டார்.



பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் காலின்ஸ் கன்சால்வஸ், கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க இவ்வளவு நீண்ட ஆண்டுகளை எடுத்துக் கொண்டது சட்ட நடைமுறைகளின்படி தவறானதாகும், இவ்வாறு கருணை மனுக்களின் மீது முடிவெடுக்க காலதாமதம் ஆனதால், ஏராளமான வழக்குகளில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கிலும் மனுதாரர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று வாதிட்டார்.



இந்த வாதங்களைக் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:



கருணை மனுக்களின் மீது முடிவெடுக்க 11 ஆண்டுகள் 4 மாதங்கள் என மிக நீண்ட காலதாமதம் ஆனதால் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்தப் பிரச்னையில் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.



எனவே, இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மனுதாரர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top