இந்த அரசு ஸ்தம்பித்துக் கிடப்பதாகவும், எங்களால் திட்டங்களைச் செயல்படுத்த இயலவில்லை என்பதாகவும் ஒரு கருத்து அதிகரித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். இப்படி ஒரு சூழலை நமது ஊடகங்கள் உருவாக்க முற்பட்டிருக்கின்றன. பல்வேறு வழிகளில் ஊடகங்கள் மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு குற்றம்சாட்டுபவராக, வழக்காடுபவராக, நீதிபதியாகத் தன்னை மாற்றிக் கொள்வதாக அமைகிறது''.
பிரதமர் இல்லத்துக்கு அழைக்கப்பட்ட, சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களிடம் பேசியபோது பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்து இது. நல்லவேளை, குற்றம் செய்பவராக என்று சொல்லாமல் விட்டாரே, அதுவே மகிழ்ச்சி.
ஒரு பத்திரிகை வேறு என்னதான் செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். நாடு முழுவதும் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் அதற்குத் துணை போகின்றனர். அரசியல்வாதிகள் மீது சொல்லப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், அத்துமீறல்கள் தண்டிக்கப்படாமலேயே அமுங்கிப் போகின்றன. அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் நன்கு சம்பாதித்து, செல்வச் செழிப்புடன் ஓய்வு பெறுகின்றனர். இந்தச் செல்வம் முறையானதா அல்லது முறைதவிர் உடைமையா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
அமைச்சர்கள் மீது பத்திரிகைகளில் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. விசாரணை நடைபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்படுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அப்படியானால், அவர் வருமானத்துக்கு அதிகமாகச் சம்பாதித்திருக்கும் சொத்து வானத்திலிருந்து கொட்டியதாக இருக்குமோ என்று வானத்தை அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு மக்களை மூளைச்சலவை செய்யும் நிலைமை உருவாகிக் கிடக்கிறது.
இதையெல்லாம் சுட்டிக்காட்டினால் பிரதமர் சொல்கிறார்- "குற்றம் சாட்டுபவராக...' நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று.
சொல்லியும் நிலைமை மாறாதபோது அதற்கான ஆவணங்களை முன்வைத்து பத்திரிகைகள் மக்கள் மன்றத்தில் கருத்து உருவாக்கம் செய்ய முற்பட்டால், பிரதமர் சொல்கிறார் - "வழக்காடுபவராக...' மாறுகிறீர்கள் என்று.
அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், இந்த அரசைத் தோற்கடியுங்கள், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துங்கள் என்கிற பிரசாரம் செய்து, எழுதித் தள்ளி, மக்கள் கருத்தை உருவாக்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் பிரதமர் சொல்கிறார்- "நீதிபதியாக...' மாறித் தண்டிக்கிறீர்கள் என்று.
ஊடகங்களின் வலிமை ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது ஒரு தண்டனை மட்டுமே. அதை மீறி அவர்களின் அபரிமிதமான சொத்துகளைப் பறிமுதல் செய்வதோ அல்லது அவர்களைச் சிறைக்கு அனுப்புவதோ இயலாது. பத்திரிகைகள் நியாயத் தீர்ப்பு சொல்லும் - சட்டத்தின் வலிமை பெறாத - பல்வேறு அரசு அமைப்புகளைப் போன்றதுதான்.
தேசத்தின் மிகப்பெரும் ஊழலாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிப் பேசினால், இஸ்ரோ செயற்கைக்கோளைத் தனியாருக்காகத் தாரைவார்த்தது குறித்துப் பேசினால், அரசுக்கு குறைந்த லாபமும் ரிலையன்ஸýக்கு அதிக லாபமும் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போட்டது குறித்துப் பேசினால், - பொதுக் கணக்குக் குழு இதைப் பற்றி பேட்டியளித்திருக்கக்கூடாது என்கிறார் பிரதமர்.
2ஜி விவகாரம் அறிக்கையாக நாடாளுமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்ட பிறகுதான், பத்திரிகையாளர்களின் வேண்டுகோளுக்காக அதுபற்றி விரிவாக சிஏஜி விளக்கம் அளித்தது என்பது பிரதமருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சங்கடம் ஏற்படுத்தும் எதுவுமே அவருக்கு வேண்டாதவையாக இருக்கின்றன.
"ஆகவே, இந்த நாட்டில், அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் முடிவுகள் மேற்கொள்வதில் அச்சப்படாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்துகிறார் பிரதமர். அதற்கும் ஒரு படி மேலேபோய், "நிலையற்ற உலகில் நாங்கள் முடிவுகள் மேற்கொள்கிறோம். நாடாளுமன்றமும், நமது சிஏஜி-யும், நமது ஊடகங்களும் இந்த உணர்வோடு தகவமைத்துக் கொள்ள வேண்டும்' என்கிற பரிந்துரையையும் முன்வைக்கிறார்.
முடிவுகள் மேற்கொள்வதில் அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளை அதைரியப்படுத்தாத, அச்சப்படுத்தாத சூழல் என்பதன் பொருள் - ஊடகங்கள் இவர்களது முடிவுகளை விமர்சனம் செய்யக்கூடாது என்பதுதானே! ராமராஜ்யமாக ஆட்சி நடந்தால் யார் விமர்சிக்கப் போகிறார்கள்?
ஊழல் மிகப்பெரிய பிரச்னையா? அது நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணமா? அது ஐரோப்பிய நாடுகளில்கூட 25 விழுக்காடு இருக்கிறது. அதையும் ஒழிக்கத்தான் வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்ற திட்டங்களுக்கான மானியம் பலவழிகளில் கசியத்தான் செய்கிறது. இதன் ஓட்டைகளை அடைக்கவேண்டும். அவருக்கு எல்லா நியாயங்களும் தெரியும், எல்லோருடைய போக்குகளும் தெரியும். ஆனால் இவற்றை எத்தனை காலம்தான் இப்படியே விட்டுவைப்பது என்று கேட்டால், "நான் செயல்படாத பிரதமர் அல்ல' என்று சொல்லவும் தெரியும்.
அவரிடம் எல்லாவற்றுக்கும் ஒரு பதில் இருக்கிறது. அந்தப் பதில்கள் நமக்கும் தெரிந்திருக்கிறது. அவரிடம் மக்கள் எதிர்பார்ப்பது பதில்கள் அல்ல, தீர்வுகள். நிலையற்ற உலகில் அவர் முடிவுகள் மேற்கொள்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எல்லா முடிவுகளும் வெற்றிபெறும் முடிவுகளாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கவில்லை. சில முடிவுகளாவது நிலையற்ற உலகில் நிலையான தீர்வு தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும்.
பிரதமர் மன்மோகன் சிங்கை செயல்படாத பிரதமர் எனச் சித்திரிப்பது யாருடைய விருப்பமும் அல்ல. அந்தச் சூழல் அவரே உருவாக்கிக் கொண்ட ஒன்று. ஊடகங்கள் வரம்பு மீறுகின்றன, நீதித்துறை நிர்வாகத்தில் தலையிடுகிறது என்றெல்லாம் அங்கலாய்ப்பதை நிறுத்திவிட்டு, சற்று செயல்படத் தொடங்குங்களேன். ஏன் தயங்குகிறீர்கள்
THANKS -DINAMANI :
தலையங்கம்
கருத்துரையிடுக