போரும், பூசலும் நிறைந்த இந்த உலகம் அமைதியையும், சமாதானத்தையுமே தேடுகிறது; அன்பையும் ஆதரவையும் நாடுகிறது. சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறது. ஆனால், அவை கிடைக்காததால் உலகம் எங்கும் மக்கள் தவிக்கின்றனர்.
உலக மக்கள் ஒன்றுபடாததற்கு எத்தனையோ காரணங்கள். மாற்றியமைக்க முடியாத ஏற்றத் தாழ்வுகள்! மதவேறுபாடுகளும், நிறக் கூறுபாடுகளும் பிரிவினைகளை வளர்க்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் வெள்ளையருக்கும், கறுப்பர்களுக்கும் நிகழ்ந்து வந்த - நிகழ்ந்து வருகிற மோதல்கள் இன்னும்கூட முடிவுக்கு வரவில்லை.
இந்தியாவில் கேட்க வேண்டுமா? இங்கே வகுப்பு வேறுபாடுகளோடு, ஜாதி வேறுபாடுகளும் போட்டி போடுகின்றன. தீண்டாமையை எதிர்த்து இத்தனை காலமாக எத்தனை போராட்டங்கள்!
உலகம் முழுவதும் வாழும் மக்கள் உலகப் போரினாலும், உள்நாட்டுப் போரினாலும் எல்லாவற்றையும் இழந்து அகதிகளானவர்களின் கண்ணீர்க் கதைகள் ஓயவில்லை; சிந்திய குருதிகள் இன்னும் காயவில்லை. 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கதையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால்தான் ஜூன் 20-ம் நாளை "உலக அகதிகள் தின'மாக அனுசரிக்கும்படி ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஐ.நா. அறிவித்த அந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. உலகம் எங்கிலும் எல்லாவற்றையும் இழந்து அநாதைகளாகத் திரியும் கோடிக்கணக்கான அகதிகளுக்கு மனிதகுலம் தமது மனிதநேயத்தைத் தெரிவித்துக் கொண்டது.
இரண்டாம் உலகப்போர் மக்களுக்கு அளவற்ற இன்னலையும், இழப்புகளையும், சுமைகளையும் ஏற்படுத்தியது. இந்தப் போரில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 4 திரில்லியன் டாலர்கள் பொருள் இழப்பு ஏற்பட்டது. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. மனித அறிவின் மாபெரும் படைப்புகள் அழிந்துபோயின; லட்சக்கணக்கான மக்கள் காயங்கள், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர்; உற்றாரையும், உறவினர்களையும் இழந்து அநாதைகளாக்கப்பட்டனர்; அகதிகளாக விரட்டப்பட்டனர்.
போர்க் காலங்களில் மனித அவலம் தவிர்க்க முடியாததுதான். ஆனால், போருக்குப் பிந்திய காலங்களில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பும், உடைமைச் சேதமும் கூடிக்கொண்டே போகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே மக்களுக்கு எதிராகக் காவல் துறையையும், ராணுவத்தையும் ஏவிவிடும் கொடுமை குறையவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதரக அலுவலகம், கடந்த ஆண்டு கடைசிவரை உலகம் முழுவதும் அகதிகளின் எண்ணிக்கை பற்றி ஆய்வு நடத்தியது. உலகம் முழுவதும் 4.37 கோடி பேர் அகதிகளாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 80 விழுக்காடு வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் இடம் பெயர்ந்து அகதிகளாக, கடந்த ஆண்டு கடைசிவரை 4 கோடியே 37 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கையாகும். உள்நாட்டுக் கலவரம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் இடம் பெயர்ந்தவர்களே இவர்கள். இந்த அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அரபு நாடுகளில் இப்போது எழுந்துள்ள கலவரங்களால் இடம் பெயர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் இடம்பெறவில்லை.
மொத்த அகதிகளில் 2.75 கோடி பேர் உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். 8.4 லட்சம் பேர் அகதிகளாக அங்கீகாரம் கேட்டு வெளிநாடுகளில் காத்திருப்பவர்கள். பல்வேறு பிரச்னைகளால் அகதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது பழைய இடத்துக்குத் திரும்புவது இப்போது குறைந்துள்ளது.
அகதிகள் எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பெறுகிறது; உலகின் மொத்த அகதிகளில் அங்கு 30 விழுக்காடு உள்ளனர். 17 லட்சம் எண்ணிக்கையுடன் இராக் இரண்டாம் இடம் பெறுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் 12 லட்சம் பேர் அகதிகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக வெளியேறி கென்யாவில் அடைக்கலம் அடைந்துள்ளவர்களையும், இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடி, உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஈழத் தமிழர்களையும் இந்நாளில் எண்ணிப் பார்க்க வேண்டும்.
""இலங்கையில் கடைசியாகப் போர்நடந்த பகுதியில் இருந்து மட்டும் 3 நாள்களில் 80 ஆயிரம் பேர் தப்பி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து அகதிகளாக வந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உடல்நலக் குறைவு, பட்டினி, சரியான ஊட்டச்சத்து இன்மை, உடலில் நீர்ச்சத்து குறைவு போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.
இலங்கை அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் யாருக்குமே மருத்துவ வசதியோ, உணவோ, இடவசதியோ இன்றித் தவிக்கின்றனர். வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் அளவுக்கு மீறி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில், தற்போது அதிக அளவில் மீட்கப்பட்ட மக்களும் அங்கு தங்கவைக்கப்பட்டால், பெரும் பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கும். தற்போது மீட்கப்பட்டவர்கள் அனைவருமே ஏற்கெனவே கவலைக்கிடமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது...'' என்று அகதிகளுக்கான ஐ.நா. சபைப் பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று, லட்சக்கணக்கானவர்களை அவர்களுடைய வாழ்விடங்களிலிருந்து நிர்கதியாக்கி இடம்பெயர்த்து ராணுவத் தடுப்பு முகாம்களிலிருந்து சிறைச்சாலைகளிலும், சித்திரவதை முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டவர்களுக்கு இன்னும் வெளிச்சம் தெரியவில்லை. ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டாலும், அதற்கான தேவையை யாரும் மறுக்க முடியாது. இனப் படுகொலை புரிந்த போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
அண்மைக் காலமாக உலகின் சில பகுதிகளில் பலகாலமாக அடங்கிக் கிடந்த மக்களின் எழுச்சி வெடிக்கத் தொடங்கியுள்ளது. வறுமையும், வேலையின்மையும், விலைவாசி உயர்வும் அவர்களைப் பிடித்துத் தள்ளுகிறது. ஊழல் கறைபடிந்த ஆட்சியாளருக்கு எதிராகவும், சர்வாதிகாரக் கொடுங்கோலர்களுக்கு எதிராகவும் அவர்கள் எழுந்து விட்டனர்; தூக்கிய கைகளுக்கு எதிரே துப்பாக்கியும், பீரங்கியும் என்ன செய்ய முடியும்?
எகிப்து, டுனீனிசியா என வட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து இப்போது மேற்காசிய நாடான சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. இது ஆதிக்க ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா மீது அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் தொடுத்துள்ள போரின் விளைவாக அந்நாட்டிலுள்ள ஏழை உழைப்பாளிகளான கறுப்பின மக்கள் இனவெறித் தாக்குதலாலும், வேலையின்மையாலும் தங்கள் வாழ்வை ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். இந்த ஆபத்தான பயணத்தில் பலர் நடுக்கடலிலேயே இறக்கவும் நேரிடுகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா, சுதந்திரம் பெற்றபோதே அது இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக உடைந்தது. "பிரிவினையைக் காங்கிரஸ் ஏற்றால் அது தமது சடலத்தின் மீதுதான் நடைபெற முடியும்' என்று ஒருமுறை ஆசாத்திடம் கூறிய அண்ணல் காந்தியும் பிரிவினை இல்லையென்றால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்பதை உணர்ந்து பிரிவினையை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.
இந்திய விடுதலை நாள் நெருங்க நெருங்க வகுப்புக் கலவரங்களும் எல்லை மீறத் தொடங்கின. அகதிகளாக மக்கள் ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கம் ஓடத் தொடங்கினர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லா வன்முறைகளும் தலைவிரித்தாடின. மொத்தத்தில் 2 லட்சம் பேர் மடிந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. வாழ்விழந்து, வழியிழந்து போனவர்களின் எண்ணிக்கைக்குக் குறைவேயில்லை. இந்தியச் சுதந்திர வரலாற்றில் கறை படிந்த பக்கங்கள் இவை.
சுதந்திரமடைந்த இந்தியா ஐ.நா. சபையின் "மனித உரிமைப் பிரகடன'த்தில் கையொப்பமிட்டு அதை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, மனித உரிமைகளைக் காக்கவும், அகதிகளைப் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளது. ஆனால், இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு ஆயுதமும், ஆலோசனைகளும் வழங்கியதும், அதைப் போர்க்குற்றங்களிலிருந்து விடுவிக்கவும் முயல்வது சரிதானா?
சீன அரசின் ஆக்கிரமிக்கப்பட்ட திபேத்திலிருந்து ஓடிவந்த தலாய்லாமா மற்றும் அவரைச் சேர்ந்தவர்களையும் அகதிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது; அதுபோலவே இலங்கையிலிருந்து தப்பி வந்த தமிழ் மக்களையும் அகதிகளாக ஏற்றுக் கொண்டபோதும், அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகளும், சலுகைகளும் போதுமானதாக இல்லை என்ற குறைபாடும், கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இங்கு மத்திய-மாநில அரசுகளே குடிமக்களை அகதிகளாக மாற்றுகிறது. இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார தளத்தில் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினருக்கு முக்கிய பங்கு ஏதும் இல்லை; ஆதிவாசிகள் குறைந்த அளவு மக்களாட்சி உரிமைகள்கூட மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமான வனப்பகுதிகள் கனிம வளங்களுக்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
இதேபோல "சிறப்புப் பொருளாதார மண்டலம்' என்ற பெயரால் அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஏழை எளிய மக்களின் பாரம்பரிய விவசாய நிலங்கள் படைபலத்துடன் பறிக்கப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக உழுது உணவளித்த அவர்கள், பட்டினி கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. வாங்கிய கடனைத் திருப்பித்தர வழியில்லாததால் தற்கொலை வரை இட்டுச் செல்கிறது. அவர்கள் சொந்த பூமியிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
"மரங்கள் அமைதியை விரும்பினாலும், காற்று அதை அனுமதிப்பதில்லை' என்பதே உண்மை. எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர்; போரும், பூசலும் இல்லாத உலகில் அநாதைகளுக்கும், அகதிகளுக்கும் இடம் ஏது?
கருத்துரையிடுக