jeevan jeevan Author
Title: இந்தியாவின் வாட்டர் கேட்
Author: jeevan
Rating 5 of 5 Des:
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் , ரகசிய கண்காணிப்பு கருவிகளை பொருத்தி ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய...


மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில், ரகசிய கண்காணிப்பு கருவிகளை பொருத்தி ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்தி, மத்திய அரசு வட்டாரத்தையே, கிடு கிடுக்க வைத்துள்ளது. மத்திய அரசோ, இந்த விஷயத்தை பூசிமெழுகுகிறது. "இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உளவு பார்க்க எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதனால், இதுபற்றி, இனிமேல் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும், மத்திய அரசு, இந்த விஷயத்தை கை கழுவி விடப் பார்க்கிறது. ஆனாலும், இந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரகசிய கண்காணிப்பு: கடந்தாண்டு செப்டம்பரில், மத்திய நேரடி வரி வாரியத்தின் அதிகாரிகள் சிலர், டில்லியில் உள்ள நிதி அமைச்சர் பிரணாபின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, பிரணாப் முகர்ஜியின் அறை, அவரது ஆலோசகர் ஒமிட்டா பாலின் அறை, அவரது தனிச் செயலர் மனோஜ் பான்ட்டின் அறை உள்ளிட்ட, முக்கியமான 16 இடங்களில், பசை போன்ற ஒரு பொருள், தடவப்பட்டிருந்ததற்கான அடையாளங்களை கண்டு பிடித்தனர். இந்த இடங்களில், மைக்ரோ போன், கேமராக்கள் ஆகியவற்றை பொருத்தி, ரகசியமாக கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இந்த தகவலால், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலை அடைந்தார். உடனடியாக இந்த பிரச்னையை, பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, மத்திய உளவுத் துறை (.பி.,) அதிகாரிகள் அடங்கிய குழு, நிதி அமைச்சக அலுவலகத்துக்கு வந்து, ஆய்வு நடத்தியது. அதில்,"சூயிங்கம் போன்ற ஒரு பசை தடவியதற்கான அடையாளங்கள் அங்கு உள்ளன. மற்றபடி, அங்கு கேமராக்களோ, மைக் போன்ற கருவிகள் எதுவும் பொருத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை'என, தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் தான், தற்போது வெளிச்சத்துக்கு வந்து, மத்திய அரசு வட்டாரங்களில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் அலுவலகத்திலேயே, இந்த அத்துமீறல் நடந்துள்ளது, மத்திய அரசு வட்டாரங்களை கவலைப் படுத்தியுள்ளது. அதிகபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் அமைந்திருக்கும், அலுவலத்திற்குள் யார் இவ்வளவு தைரியமாக நுழைந்து, இதுபோன்ற குளறுபடிகளை நிகழ்த்தியிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


யார் காரணம்? உண்மையிலேயே பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து, இதுபோன்ற உளவு பார்க்கும் பணிகளில் நிபுணர்களாக உள்ளவர்கள், சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுவதாவது: இது ஒரு ரகசிய கண்காணிப்பு முயற்சியாக இருந்திருக்கலாம். நீண்ட காலமாக இந்த கண்காணிப்பு நடந்திருக்கலாம். டெலிபோனில் பேசப்படுவதை டிரான்ஸ்மிட்டர் மூலம் பதிவு செய்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. லேசர் ஒளிக்கற்றைகள் மூலமாகவோ, அல்லது அறையில் மாட்டப்பட்டுள்ள புகைப்படங்களில் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யப்பட்ட டிரான்ஸ்மிட்டர்களை பொருத்துவதன் மூலமாவோ, கண்காணிப்பு மேற்கொண்டிருக்கலாம். தங்களது பணி முடிந்த பின், அவசரம், அவசரமாக அந்த கருவிகளை அங்கிருந்து அவர்கள் அகற்றி இருக்கலாம். இந்த அவசரத்தில், கருவிகளை பொருத்துவதற்காக தடவப்பட்ட பசைகளை அகற்ற மறந்திருக்கலாம். நிதி அமைச்சகம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், தொழில் நிறுவனங்களுக்கும், சந்தை ஆர்வலர்களுக்கும், மிகவும் முக்கியமானவை. எனவே, இத்துறைகளைச் சேர்ந்த யாராவது ஒருவர், காண்காணித்திருக்கலாம். அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக, அரசியல் எதிரிகளும், இந்த வேலையைச் செய்திருக்கலாம். அரசுத் துறையைச் சேர்ந்தவர்களே இதைச் செய்திருக்கலாம். அரசின் முடிவுகளை வேவு பார்ப்பதற்காக வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்த காரியத்தை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்தியாவின் வாட்டர் கேட்? அமெரிக்க அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட "வாட்டர்கேட்' ஊழலை யாரும் மறக்க முடியாது. 1970களில் நடந்த இந்த ஊழல், உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, எதிர்க்கட்சியினரின் அலுவலகங்களில் ஒட்டு கேட்கும் கருவிகளை பொருத்தினார் என்பது, குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அதிபர் பதவியிலிருந்து நிக்சன் விலகினார். "பிரணாப் விஷயத்திலும், இதுபோல் நடந்துள்ளதா'என, எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ராணுவ அமைச்சகத்திலும், இதுபோன்ற கண்காணிப்பு அல்லது உளவுப் பணிகள் நடந்திருந்தால்,என்ன நடக்கும் என்பதை யோசித்து பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. இதுபோன்ற விபரீதங்களை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசுக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி இது. விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு?


ஒட்டுக் கேட்க பயன்படும் கருவிகள்: அலுவலகங்களில் நடக்கும் முக்கியமான ஆலோசனைகளையும், டெலிபோன் பேச்சுக்களையும் ஒட்டு கேட்பதற்காக, தற்போது சந்தையில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதியுடைய கருவிகள் வந்து விட்டன. 500 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், இந்த கருவிகள் கிடைப்பதாக, மின்னணு சந்தை வர்த்தர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற கருவிகளை, அலுவலகத்தில், மேஜை, நாற்காலிகளுக்கு அடியிலோ, அதிகம் பயன்படுத்தப்படாத இடங்களிலோ, எளிதில் பொருத்த முடியும்.


இவ்வாறு ஒட்டுக் கேட்பதற்காக பயன்படும் கருவிகளில் சில:


டிஜிடல் போட்டோ பிரேம் ஜி.எஸ்.எம்., பக்: அலுவலகத்தில் பேசப்படும் விஷயங்களை ஒட்டு கேட்பதற்காக, விஷேசமாக வடிவமைக்கப்பட்ட போட்டோ பிரேம்கள், தற்போது கிடைக்கின்றன. இதில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் குறிப்பிட்ட ரகசிய எண், முன்கூட்டியே புரோகிராம் செய்து வைக்கப்படும். அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்புவதன் மூலமாகவோ, டயல் செய்வதன் மூலமாகவோ, இந்த கருவியை இயங்க வைக்க முடியும். குரல்கள் மட்டுமே பதிவாகும்.


பரோபலிக் லிசனிங் டிவைஸ்: இந்த கருவியை, அலுவலகத்தில் மறைவான ஒரு இடத்தில் பொருத்தி, அங்கு பேசப்படுவதை பதிவு செய்து கேட்க முடியும். இதில் வீடியோ வசதியும் உள்ளது. இதில் பதிவாகும் காட்சிகளை "ஜூம்' செய்து பார்க்க முடியும். சிறிய சத்தத்தை கூட, மிக துல்லியமாக இந்த கருவியில் பதிவு செய்ய முடியும்.


ஜி.எஸ்.எம்., வால்கிளாக்: அலுவலகத்தில் மாட்டப்பட்டுள்ள சுவர் கடிகாரங்களின் பின் பகுதியில் இந்த கருவியை பொருத்த முடியும். இந்த கருவியை இயக்குவதற்கு "சிம் கார்டு' அவசியம். இரண்டு அழைப்புகளுக்கு பின், தானாகவே இந்த கருவி இயங்க ஆரம்பித்து விடும்.


ஜி.எஸ்.எம்., டபுள் பிளக் அடாப்டர்: இது, சுவிட்போர்டுகளில் மாட்டக் கூடிய, பிளக் போன்ற தோற்றத்தில் இருக்கும். குரல்களை மட்டுமே பதிவு செய்யும். மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இந்த கருவியின் இயக்கம் செயல் இழந்து விடும். மீண்டும் மின்சாரம் வந்தவுடன், தானாகவே இயங்க துவங்கி விடும்.


ஆப்டிகல் மவுஸ் ஜி.எஸ்.எம்.,: கம்ப்யூட்டர் மவுசில் பொருத்தக் கூடிய மைக்ரோ போன் கருவி இது. இதற்கும் சிம் கார்டு தேவை. கம்ப்யூட்டரை ஆன் செய்வதன் மூலம், இந்த கருவிக்கு சார்ஜ் ஏறும். கம்ப்யூட்டர் இயங்காத நேரத்தில், பேட்டரி மூலம் செயல்படும்.


கேள்விக்கு என்ன பதில்?


* கண்காணிப்பு பணி, உளவுப் பணி போன்ற விஷயங்கள் நடந்துள்ளனவா என்பதை கண்டுபிடிப்பதற்காகவே, மத்திய உளவுப் படையில் (.பி.,) சிறப்பு பிரிவு இயங்குகிறது. ரகசிய கண்காணிப்பு நடந்ததாக சந்தேகம் எழுந்தவுடன், இதுகுறித்து விசாரிக்க, .பி.,யை தான், முதலில் அழைத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய நேரடி வரி வாரியத்தை ஏன் அணுகினார்கள் என, தெரியவில்லை.


* .பி., நடத்திய விசாரணையில், ரகசிய கருவிகள் எதுவும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடக்கவில்லை என, தெரிவித்துள்ளது, அப்படியானால், நிதி அமைச்சரின் அலுவலகத்தில், முக்கியமான 16 இடங்களில், பசை போன்ற பொருட்கள் ஏன் தடவப்பட்டுள்ளன?


* அலுவலகத்தை சுத்தம் செய்வதற்கும், அலுவலகத்தை பூட்டி, சாவியை பாதுகாப்பதற்காக வைத்துக் கொள்வதற்காகவும், ஒரு தனிப் பிரிவு இயங்குகிறது. அப்படியானால், அலுவலகத்தில் உள்ளவர்களின் உதவி இல்லாமல், இந்த கண்காணிப்பு நடந்திருக்காது என்ற சந்தேகத்துக்கு, பதில் என்ன?


இது முதல் முறையல்ல: நிதி அமைச்சகம் போன்ற, மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளது இது முதல் முறையல்ல என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் உள்துறை செயலர் சோமய்யாவின் அலுவலகத்திலும், இதுபோன்ற கண்காணிப்பு பணிகள் ஏற்கனவே நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சஞ்சய் காந்தியின் மறைவுக்கு பின், அவரது மனைவியும், தற்போதைய பா.., எம்.பி.,யுமான மேனகாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோரது பதவிக் காலங்களில், அவர்களது அலுவலகங்கள் கண்காணிக்கப்பட்டதாகவும், ஓய்வு பெற்ற .பி.எஸ்., அதிகாரி ஒருவர், தான் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியுள்ளார்.

THANKS : DINAMALAR

About Author

Advertisement

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top