யோகாசனத்திலும் தியானத்திலும் ஈடுபடுகிற மேல்தட்டு மக்கள் 50,000 பேர் பாபா ராம்தேவ் நடத்திய சத்தியாகிரக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குகொண்டதை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக் கருதி, கண்ணீர்புகை, தடியடி எல்லாமும் நடத்துகிற அளவுக்கு மத்திய அரசு செயல்பட்டிருப்பது, அனைத்துத் தரப்பிலும் ஆச்சரியத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல, ஒரு துறவியைப் பார்த்து அரசுக்கு இத்தனை அச்சமா என்கிற ஏளனத்துக்கும் வழிகோலி இருக்கிறது.
கடந்த நான்கு தினங்களாகவே மத்திய அரசின் போக்கு இயல்புக்கு மாறுபட்டதாகவே இருந்து வந்தது. அண்ணா ஹசாரேவுக்குத் தரப்படாத முக்கியத்துவம் பாபா ராம்தேவுக்குக் கொடுக்கப்பட்டது. அவரை விமான நிலையத்துக்குச் சென்று நான்கு மத்திய அமைச்சர்கள் சந்தித்து சமரசம் பேசினார்கள். அதையும் மீறி நடைபெற்ற உண்ணாவிரதத்தை நள்ளிரவில் தடியடி நடத்தியும், பெண்களைப் பலவந்தமாக தூக்கிவீசியும், அப்புறப்படுத்தியிருப்பது தில்லி போலீஸ் வரலாற்றில் மிகப்பெரும் களங்கமாகவே நீடிக்கும்.
இந்தச் செயலை மத்திய அரசு நியாயப்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் "அவர் அளித்த வாக்குறுதிப்படி நடந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது' என்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. "இந்த நடவடிக்கையை 100 விழுக்காடு தெரிந்தே செய்தோம்' என்கிறார் மத்திய அமைச்சர் கபில் சிபல். "மாலை 5 மணி வரை மட்டும்தான் அவரது உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அத்துடன் முடித்துக்கொள்ளாமல் நீடித்தார், ஆகவே சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்கிறது அரசு. இவர்கள் தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. அதுபற்றி ஏன் அவர்கள் முன்பே குறிப்பிட்டு அறிக்கை வெளியிடவில்லை?
அங்கே கூடியிருந்தவர்கள் யாரும் எந்தவிதமான கலவரத்துக்கும் தயார் நிலையில் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஐம்பதாயிரம் பேர் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்தச் சம்பவத்தில், காவலர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ஆனால், ராம்தேவ் ஆதரவாளர்கள் அடிபட்டும், ஆடைகள் கிழிந்தும், மயக்கமுற்றதுமான சம்பவங்கள் நிறைய.
காவி உடுத்திய துறவி, அதைவிடுத்து பெண்ணுக்கான வெண்ணிற சல்வார் கம்மீஸ் அணிவித்துத் தப்பிச்செல்ல வைக்கப்படுகிறார் என்றால், அங்கே நிலவிய சூழல் எத்தகையது என்பதையும், "காவல்துறையினர் துப்பட்டாவால் என் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்தனர்' என்று ராம்தேவ் கூறுகிறார் என்றால், காவல்துறையின் அத்துமீறல் அளவுகடந்திருந்தது என்பதையும் கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியா முழுவதிலும் பேசப்பட்ட, ஆளாளுக்கு ஆதாரங்களுடனும், ஆதாரம் இல்லாமலும் பேசிவருகிற விவகாரம் - 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்லப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும், அவர் தார்மிக அடிப்படையில் பதவி விலகவேண்டும், அல்லது ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான். இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அமைச்சரவைக் கூட்டத்தில் மாறன் பங்குகொள்கிறார். மன்மோகன் இந்த விவகாரத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.
ஒரு மிகப்பெரிய முறைகேடைப் பற்றி, அதிகார துஷ்பிரயோகத்தைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசு, பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுவது ஏன்?
இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம், படித்த மேல்தட்டு வர்க்கமும் ஊடகங்களும் இந்தத் தாக்குதல் குறித்தும், இது தொடர்பாக ராம்தேவ் எடுக்கப்போகும் நடவடிக்கை, அரசின் எதிர்நடவடிக்கை என்று பரபரப்பாக இந்தியா முழுவதும் பேசப்படும் விவகாரமாக்கிவிட்டது மத்திய அரசு. ஒரு தர்மசங்கடத்தை மறைக்க, சமாளிக்க, வேண்டுமென்றே இன்னொரு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கி திசைதிருப்பும் கந்தலாகிப்போன ராஜதந்திரத்தை கையில் எடுத்துள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
பாபா ராம்தேவுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. பாபா ராம்தேவுக்குக் கறுப்புப் பணம் மீதும், ஊழலைப் பற்றியும் ஏற்பட்டிருக்கும் திடீர் அக்கறை போலித்தனமானது என்கிற நமது கருத்தை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம். ஊருக்கு ஊர், ஆளுக்கு ஆள் ஊழலுக்கு எதிராகத் தனித்தனியாகப் போர்க்கொடி தூக்கும்போது, ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முனைப்பு மழுங்கிவிடும் என்கிற நமது கருத்தையும் முன்பே ஒரு தலையங்கத்தில் பதிவு செய்திருந்தோம்.
அதற்காக, பாபா ராம்தேவை உண்ணாவிரதம் நடத்த அனுமதித்துவிட்டு யாரும் எதிர்பார்க்காத நள்ளிரவு நேரத்தில், உண்மையிலேயே ஊழலைப் பற்றியும் கறுப்புப் பணம் பற்றியும் அக்கறையுடன் இந்த உண்ணாவிரதம் பயனளிக்காதா என்கிற எதிர்பார்ப்புடன் கூடியிருந்த அப்பாவிகள் மீது நடத்தியிருக்கும் தாக்குதலை எப்படி ஏற்றுக்கொள்வது? பாபா ராம்தேவைச் சமாதானப்படுத்த விமான நிலையத்துக்கு அமைச்சர்கள் போயிருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக அவரைக் கைது செய்து திருப்பியனுப்ப காவல்துறையல்லவா அனுப்பப்பட்டிருக்க வேண்டும்?
நடந்தேறியிருப்பது அரசு வன்முறை! வெளிச்சம் போடப்பட்டிருப்பது அரசின் கையாலாகாத்தனம்!!
கருத்துரையிடுக