நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு 25 பைசாக்களை ஒழித்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இன்று, ஆமதாபாத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மேம்பாலம் ஒன்றை திறந்து வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
மோடி கூறியதாவது:
ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் போராடி வருகிறார். கறுப்புப் பணத்தை ஒழிக்க இதுதான் ஒரே வழி. அவரது கோரிக்கைக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஆயிரம் ரூபாய் நோட்டுக்குப் பதிலாக 25 பைசா சில்லறை நாணயங்களை மத்திய அரசு ஒழித்துள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் "கடும் நடவடிக்கை" இதுதானா?
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை விட மிகச் சிறந்த நிர்வாகத்தை ஆமதாபாத் மேயரால் வழங்க முடியும்.
ஒரே இரவில், குஜராத் மாநிலத்தின் நியாய விலைக் கடைகளுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. குஜராத் மக்கள் இந்தியர்கள் கிடையாதா? இத்தகைய செயல்பாட்டை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
கருத்துரையிடுக