2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடங்கியதில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம்சாட்டினார்.
ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை மாற்றியதில் மாறன் முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயக் கொள்கை குறித்த பல்வேறு அம்சங்களைக் கவனிக்கும் அமைச்சர்கள் குழுவிடம் இருந்து அதிகாரத்தை பறித்துக்கொண்டவர் அவர் என ஜோஷி குற்றம்சாட்டினார்.
பல்வேறு ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளன. அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவிடம் இருக்க வேண்டிய அதிகாரங்கள் தொலைத்தொடர்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த 2ஜி ஊழலும் அப்படித்தான் தொடங்கியுள்ளது என மனோகர் ஜோஷி விளக்கினார்.
ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தை நிதி அமைச்சகத்துடன் இணைந்து முடிவுசெய்ய வேண்டும் என்று 2003 அமைச்சரவைக் கூட்டத்தில் கூறப்பட்டது. தயாநிதி மாறன் எதற்காக அதை மாற்றவேண்டும் என ஜோஷி கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது 2007-ல் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து செய்திப் பத்திரிகை ஒன்று கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாறனுக்கும் பங்கு உண்டு என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முதலில் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்க மறுக்கப்பட்டது. பின்னர் அதன் உரிமையாளர்கள் மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் அதை ஒப்படைத்த பின்னர் அதற்கு தொலைத்தொடர்பு உரிமம் வழங்கப்பட்டது. மாறன் குடும்ப நிறுவனமான சன் நெட்வொர்க்கில் ரூ 675 கோடியை மேக்ஸிஸ் குழுமத்தின் துணை நிறுவனம் முதலீடு செய்த பின்னரே மாறன் ஏர்செல் நிறுவனத்துக்கு தொலைத்தொடர்பு உரிமம் வழங்க அனுமதி அளித்தார் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் தவறு ஏதும் செய்யவில்லை என அவர் கூறியுள்ளார்.
கருத்துரையிடுக